தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்துப் பெற்றோரிடம் கருத்துக் கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களையும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அப்படித் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இருக்காது என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பூசாரியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து பேசுகையில், "பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வரும் 10ஆம் தேதி வெளியிடுவார். நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை. பெற்றோர்கள் மனநிலை அறிந்து கரோனா தாக்கம் குறைந்த பின் முதலமைச்சர் தான் இதில் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.