மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் அணிய வேண்டிய தங்கக் கவசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தங்கக் கவசத்தை ஜெயலலிதா கொடுக்கும்போதே. இது அதிமுகவினுடையது என்றும், இதனை அதிமுகவின் பொருளாளரும், பசும்பொன்னாரின் நினைவு அறக்கட்டளையில் இருப்பவரும் இணைந்து இந்தத் தங்கக் கவசத்தை ஆண்டுதோறும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைமைதான் தொடர்ந்துவந்தது. ஆனால், 2017ல் இதேபோல், கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் உரிமை கொண்டாடினார்கள். எடப்பாடி முதலமைச்சராக இருந்த அந்த நேரத்தில் வீணாக சர்ச்சை வேண்டாம் என்று, மதுரை மாவட்ட ஆட்சியர் எடுத்துகொடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் பெற்று அதனை அணிவித்தனர்.
தற்போது ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து விலகியபிறகு அதிமுகவின் பொதுக்குழுவால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அதிமுக கட்சி தொடர்பான பணபரிவர்தனையை இந்தியன் வங்கியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள இந்தியன் வங்கி தற்போதைய அதிமுக பொருளாளருக்கு முழுமையாக பாத்தியப்பட்டது. எனவே அவர் எடுக்கலாம் என ஆர்.பி.ஐ. விதிமுறைகளும், இந்திய அரசும் சொல்கிறது. எடப்பாடியால் அனுப்பிவைக்கப்பட்ட பொருளாளரும், அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதனும், மதுரை திருமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் நான் அனைவரும் சென்று வங்கியில் அதிமுகவின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என சொல்லியிருந்தோம். அவர்களும், ‘நீங்கள் எடுத்துகொள்ளலாம். முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளையில் இருந்துவந்து ஒருவர் கையெழுத்து போட்டால் போதும்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல், அதிமுகவில் உள்ள முக்குளத்தைச் சார்ந்த அனைத்து தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் என அனைத்து நிர்வாகிகளும் பசும்பொன்னுக்கு சென்று அங்கு அறக்கட்டளையில் விவரத்தை எடுத்து சொல்லி நீதிமன்ற தீர்ப்பையும் காட்டினோம். அவர்கள் நிச்சயம் வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், எங்களுக்கும் பல நெருக்கடிகள் உள்ளன. முக்கியமாக நீதிமன்றம் வரும் 26ம் தேதி கொடுக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து அனைத்தையும் நாங்கள் பின்பற்றுவோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நடப்போம்” என்று தெரிவித்தார்.