புதுச்சேரியின் பிரபலமான குபேர் மீன் அங்காடியில் மீன் விற்பனை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த அங்காடியில் இரசாயணம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன.
அதையடுத்து இன்று அங்காடியில் பல வகையான மீன்கள் வேனில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்யும் நேரத்தில் புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அது அங்குள்ள மீன் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’’கடந்த சில நாட்களாக தமிழக மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் பார்மலீன் என்ற வேதிப்பொருள் மூலம் மீன்கள் சில நாட்கள் கெடாமல் இருப்பதற்காக தெளிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதாக புகார்கள் வருகின்றன. அதற்காக சோதனை நடத்தினோம். அங்காடியில் உள்ள ஒவ்வொரு வகை மீன்களையும் சுமார் 10 கிலோ அளவில் சோதனை செய்ய இருப்பதாகவும், இதில் அந்த வேதிப்பொருள் கலந்து இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.
அதேசமயம் ஆய்வின் போது தமிழகம் மற்றும் கேரள பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்படாமல், புதுச்சேரி மக்கள் கொண்டு வந்த மீன்களை ஆய்வு செய்ததாகவும், ஆய்வுக்காக ஓரிரு மீன்களை எடுத்து செல்வதற்கு பதிலாக ஒருசில மீன் வியாபாரிகளிடம் ரூ 1500 மதிப்புடைய நான்கைந்து மீன்களை எடுத்து சென்றால் முதலுக்கே மோசமாகி விட்டதாக மீன் வியாபாரிகள் குமுறுகின்றனர்.