சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவது குறித்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தொலைக்காட்சி பட்டிமன்றப் பேச்சாளர் மோகன்தாஸ் கலந்துகொண்டு, ''பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தேர்வுக்கு படிக்க வேண்டும். மாணவர்களுக்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வி அடைந்தவர்கள் தான் வீறுகொண்டு வெற்றி நடைபோடுவார்கள். எனவே, வரும் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் பயின்று வெற்றியடைய வேண்டும்'' எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், சுவாமி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலைய்யா, நந்தனார் கல்விக்கழக நிர்வாகி ஜெயச்சந்திரன் உட்பட பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர். பள்ளியின் ஆசிரியர் மலைராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.