நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றுத் தருவோம் என்று 2017-ல் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கடைசிவரை விலக்கு பெற்றுத் தரவில்லை. நீதிமன்றமும் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சலுகை வழங்க முடியாது என்று கூறிவிட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கேள்விகள் கேட்படும் என்பதால், மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பலரால், நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
தொடர்ந்து 3-வது ஆண்டாக தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களின் டாக்டர் கனவு பறிபோனது. அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா போன்ற கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வு எழுதாமல் முறைகேடு செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகி இருக்கிறது. சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த அந்த மாணவர், இந்த ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதி(?) வெற்றி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துவிட்டார்.
இந்நிலையில், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நீட் தேர்வு எழுதியதை அண்மையில் கண்டுபிடித்த தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்தியது. இதனால், அந்த மாணவரும், குடும்பத்தினரும் இப்போது தலைமறைவாகி விட்டனர்.
"மருத்துவ கவுன்சிலிங்கிற்கு வரும்போது அவர் விண்ணப்பித்தில் ஒட்டியிருந்த புகைப்படம் வேறு. நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் ஒட்டியிருந்த புகைப்படம் வேறு. எனவே, நீட் தேர்வை எழுதியது அவர்தானா? என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி சுல்தான் பாட்ஷா தலைமையிலான தனிப்படை போலீஸார், உதித் சூர்யாவின் சென்னை தண்டையார்பேட்டை அரிஹந்த் பேலஸ் குடியிருப்புக்கு இன்று (19-09-2019) வந்தனர். ஆனால், ஏற்கனவே உதித் சூர்யா குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டதால் அண்டை வீட்டாரிடம் விசாரித்து சென்றுள்ளனர்.
மருத்துவ கவுன்சிலிங் நடக்கும்போது, "கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது. நாங்கள் எல்லா மாணவர்களையும் ஸ்கிரீன் செய்கிறோம். ஒருத்தர் 2 மாநிலத்திலே அப்ளை பண்ணினாவே டிஸ்குவாலிபை ஆகிடுவார். நேட்டிவிட்டி சர்டிபிகேட் செக் பண்றோம். நீட் அப்ளிகேசன், ஹால்டிக்கெட் எல்லாத்தையும் செக் பண்றோம். அதனால் யாரும் முறைகேடு செய்ய முடியாது" என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், இதையெல்லாம் தாண்டி நீட் தேர்வு எழுதாமல், ஒரு மாணவர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.