உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்றும் தொகுதி வரையரை முழுமையாக சீராக செய்யவில்லை என்றும் எதிர்கட்சிகள் நீதிமன்றங்களை நாடியது. அங்கே எல்லாம் சரியாக நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொல்லி தேர்தலை நடத்த வேட்பு மனுக்களை வாங்கி வருகின்றனர்.
ஆனால் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட குழப்படிகள் சரி செய்யப்படாமலேயே உள்ளது. உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியக் குழு தலைவர் ஆதிதிராவிடர் பெண். ஆனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 13 வார்டுகளில் ஒன்று மட்டுமே. அதாவது 12 வார்டுகளில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தனி வார்டில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் தான் சேர்மன் ஆக முடியும். அதேபோல தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தில் உள்ள சிவவிடுதி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வாக்குகளை அதிகமாக தவறாக காட்டி ஆதிதிராவிடருக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி பல குழறுபடிகள் தீர்க்கப்படாமல் அவசரமாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது தேர்தல் ஆணையத்தின் தவறால் பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளது. அதாவது, வேட்பு மனுக்களோடு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்ய பாகம், வார்டு, வரிசை எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பம் கொடுத்துவருகின்றனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது வாக்காளர் அடையாள அட்டை காட்டப்பட வேண்டும்.
ஆனால் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலில் உடமைகள் அத்தனையும் இழந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளையும் இழந்துள்ளனர். தற்போது அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டைபெற இ சேவை மையத்திற்கு சென்ற வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி. காரணம் புதிய வாக்காளர் அட்டை அச்சடிக்கும் அட்டை இல்லை என்பதே. இந்த அட்டைகளை தேர்தல் ஆணையம் தான் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. கேபிள் டிவி நிறுவனங்களின் கீழ் தான் இ சேவை மையங்கள் செயல்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்ட தாசில்தார் கூறும்போது.. வாக்காளர் அடையாள அட்டைக்கான அட்டைகளை வழங்கிய தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடவடைந்துவிட்டது. அதன் பிறகு அட்டைக்கான தொகையை தனியார் நிறுவனம் உயர்த்தி கேட்டதால் இழுபறி ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அட்டை அனுப்பவில்லை. அதனால் புதிய வாக்காளர்அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு வழங்க முடியவில்லை என்றார்.
தேர்தல் ஆணையம் மற்றும் கேபிள் டிவி அலட்சியத்தால் பல வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒ செ சொர்ணகுமார்.. புயலில் பலரது உடமைகளுடன் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையும் காணாமல் போய்விட்டது. இப்ப அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். பரிசீலனையில் ஒரிசினல் வாக்காளர் அடையாள அட்டையை காட்டணும். இ சேவை மையத்தில் அட்டை இல்லை என்கிறார்கள். அப்பறம் எப்படி கொண்டு போறது. தேர்தல் ஆணையம் செய்யும் தவறுக்கு வேட்பாளர்கள் என்ன செய்ய முடியும். அதனால வேட்பாளர்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை பரிசீலனையில் ஏற்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உடனே உத்தரவிட வேண்டும் என்றார்.