இன்று செய்தியாளர்களைச் சந்தித்த 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "தற்பொழுது அரசியல் கட்சித் தொடங்கும் நடிகர்கள் போராட்டத்திற்காக வீதிக்கு வராமல் தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர். இது தான் மக்களை இழிவாக மதிப்பிடுவது. அரசியல் செய்யாமல் நேரடியாகத் தேர்தலுக்கு வருவது, மக்களை இவர்கள் குறைவாக மதிப்பிடுவதாக நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்குக் கோபம் வருகிறது.
ரஜினிகாந்திற்கும், கமலுக்கும் அரசியலில் விழும் அடியில், இனி எந்த நடிகருக்கும் வெறும் திரையில் நடித்துவிட்டோம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் எனும் எண்ணம் வராது. நடிப்பது மட்டுமே நாடாளத் தகுதி என்ற எண்ணத்தை இத்தோடு ஒழிக்கவேண்டும் என நினைக்கிறோம். நீயும் அங்கிருந்து தானே வந்தாய் என்பார்கள். நான் ரசிகர்களைச் சந்திக்கவில்லையே. மக்களைச் சந்தித்தேன். இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி இருக்கிறது என்றால், ஐயா நல்லகண்ணுக்கு மட்டும்தான் அது இருக்கிறது. அவருக்கு இல்லாத தகுதி இங்கு எவருக்கு இருக்கிறது இந்த நாட்டில். அவர் எங்க இருக்கிறார், நீங்க எங்க இருக்கீங்க. ஒருவர் பேசுவதில்லை அவரைப்பற்றி. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சுருட்டால் மீசையைச் சுட்டும் போராட்டத்தை விட்டு விலகாத அவர் எங்கே? ஏதுவுமே இல்லாமால் நேரடியாக வந்து முதலமைச்சர் ஆகிடுவோம் என்கிற நீங்கள் எங்கே?
எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தார். ஈழ விடுதலைப் போரில் நூறு விழுக்காடு உண்மையாக இருந்தார். அதனால் அவர் மீது அளப்பரிய மரியாதை இருக்கிறது. மற்றபடி அவர் என்ன சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். தமிழ் வழிக்கல்வியை ஆங்கில வழிக்கல்வியாக மாற்றியதே அவர் தான். கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்தவரும் அவர் தான். முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கையெழுத்திட்டு கேரளாவுக்கு கொடுத்ததும் அவர்தான். இப்படிப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் இப்பொழுது தேவை காமராஜரும், கக்கனும் தான் என்றார்.
இந்நிலையில் சீமானின் எம்.ஜி.ஆர் குறித்த பேச்சுக்கு அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''எம்.ஜி.ஆர் மீது புழுதியை வாரித் தூற்ற நினைத்தால் அது உங்களுக்கே பெருங்கேடாக அமையும். எம்.ஜி.ஆர் புகழை அழிக்கவே முடியாது'' என்றார்.