நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கனியாமூரில் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கடலூரில் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்ற சீமான் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "அதிகாரத்தில் இருப்பவர்கள் நடந்த தவறை மறைக்க நினைக்கின்றனர். அதை இந்த ஸ்ரீமதியின் நிகழ்வும் நிரூபிக்கின்றது" என்றார்
இது குறித்து ட்விட்டர் பதிவில் "கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணை கோரும் பெற்றோரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆறுதல்கூறி, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர துணைநிற்போம் என்று உறுதியளித்தேன். ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.