ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாகவும், மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் கடந்த திங்கள்கிழமை காலை மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார்.
அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்தார். அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இந்த மசோதா நிறைவேறியது. பின்னர் இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெற்ற நிலையில், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஜம்மு காஷ்மீரை பிரிப்பதாக அறிவித்த உடனே அங்கு முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோன்ற ஒரு நிலை நாளை தமிழகத்துக்கும் ஏற்படும். வடமாநிலத்தவர்களை ஜம்மு காஷ்மீரில் குடியமர்த்தவே தற்போது அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.