கரோனா ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போது சத்தமில்லாமல் பெட்ரொல், டீசல் விலையை ஏற்றி மக்கள் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். விலை ஏற்றத்தால் விலைவாசியும் ஏறிக் கொண்டிருக்கிறது. கரோனா முடக்கத்தால் வேலைகள் கூட இல்லாமல் செலவுக்கே வழியின்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கூட தவித்து வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களும் விலை ஏற்றம் மேலும் வதைக்கிறது.
இந்த நிலையில் தான் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நேற்று (29/06/2020) தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுக்கோட்டை நகரில் மாவட்டத் தலைவர் தலைமையிலும், கீரமங்கலத்தில் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ் தலைமையில் தபால் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதுக்கோட்டையில் 25 பேர்கள் மீதும் கீரமங்கலத்தில் 20 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது அனுமதியின்றி கூட்டம் கூடியது, ஆர்ப்பாட்டம் செய்தது, கரோனாவைத் தடுக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நின்றது என்பன உள்ளிட்ட பல காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும் போது.. மக்கள் பிரச்சணைக்காக போராடினால் கூட வழக்குப் போட்டு மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தால் கூட வழக்கு என்பது ஏற்க முடியவில்லை என்றனர்.