தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை ஒரு வாரத்திற்கு முன்பே நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்காவில் இருந்ததால் 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஓபிஎஸ், 18 -ந்தேதி சென்னை திரும்பிய நிலையில் கேபினெட்டை கூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கூட்டத்தில் சில முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
இது குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, " உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகள் மட்டும் வர்த்தக நிறுவன கட்டிடங்களுக்கான வரி விகிதத்தை 100 சதவீதம் அளவில் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நிறைய புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், இந்த அதிர்ப்தி அரசுக்கு எதிராகத் திரும்பலாம். அதனால், வரி உயர்வுக்கு முந்தைய நிலையே தொடர்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடைமுறையை இரு பகுப்பாகப் பிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கல்வி சார்ந்த விசயங்கள் ஒரு பகுப்பாகவும், ஆராய்ச்சி மற்றும் கல்வி சாராத விசயங்கள் மற்றொருப் பகுப்பாகவும் பிரிக்கவிருக்கிறார்கள். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது " என்று அமைச்சரவை கூட்டத்தின் விவாதங்களை சுட்டிக்காட்டுகிறார்கள் உயரதிகாரிகள்.
அதேபோல் இந்த கூட்டத்தில் போன முறை நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பொங்கல் பரிசு 2000 ரூபாய் அறிவித்திருத்தார்கள். ஆனால் நீதிமன்றம் தலையிட்டதால் அந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது அதிமுக அரசு. இந்த முறை உள்ளாட்சி தேர்தல் வரவேண்டி இருப்பதால் அந்த 2000 ரூபாயை மீண்டும் தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தலையொட்டி வழங்கலாமா என்ற ஒரு வாதமும் அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்றது.