நாகா்கோவில் கலெக்டா் அலுவலக வளாகத்தில் நுழைந்த டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை டீமை கண்டதும் அனைத்து துறை அலுவலகமும் அதிர்ந்து போனது. அந்த டீம் கலெக்டா் அலுவலக கூடுதல் கட்டிடத்தின் மூன்றாவது தளத்துக்கு சென்று குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்குள் நுழைந்தது.
அங்கு குழந்தைகள் நல அலுவலா் குமுதா மேஜையில் இருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 800ஐ கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பணம் லஞ்ச பணமா என்கிற கோணத்தில் லஞ்ச ஓழிப்பு போலிசார் விசாரித்தபோது அது லஞ்ச பணம் என உறுதியானது.
குமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல காப்பகங்கள் அதிகமாக உள்ளது. இந்த காப்பகங்கள் குழந்தைகள் நல அலுவலகத்தின் கீழ் வருகின்றன. இதன் அதிகாரியாக இருக்கும் குமுதா இதே பொறுப்பில் 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
மேலும் குழந்தைகள் காப்பகத்தை ஆண்டு தோறும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு அலுவலா் குமுதா லஞ்சம் வாங்குவதாகவும் அது போல் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நடத்தியதாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் தான் லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் சென்று சோதனை செய்த போது கணக்கில் காட்டாத அந்த லஞ்ச பணத்தை கைப்பற்றினார்கள் மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனா். இந்த சம்பவம் கலெக்டா் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.