ஆந்திராவில் இருந்து இரும்பு குழாய் பாரம் ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக வந்த லாரியில் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்து ஈரோட்டுக்கு சங்ககிரி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் மத்திய உளவுப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் காவலர்கள் சங்ககிரி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தீரன் சின்னமலை நினைவு அரங்கம் அருகே, ஒரு லாரியில் இருந்து இரும்பு குழாய்களை இறக்கி மற்றொரு லாரியில் சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில், அந்த லாரியை சோதனை செய்தனர்.
இரும்பு குழாய்களுக்கு அடியில் 30 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அந்த லாரி ஆந்திராவில் இருந்து இரும்பு குழாய்களை ஏற்றிக்கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். ஈரோடு மாவட்டம் களைகாரையான் பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தேவேந்திரன் (30), கார்த்திகேயன் (24), கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (29), நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (34), குமாரபாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 30 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.