“எங்கள் அணியை கலைத்திடுவோம், கட்சித் தலைவர்களைக் கையில் வச்சிக்கிட்டு பணத்தைக் கொடுத்து வாங்கி வருகிறார்கள்” என்று பாஜக நிர்வாகிகள் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக மருதையன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பாஜக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சிக்காகப் பாடுபடும் எங்களைக் கேட்காமல் எப்படி புதிய தலைவரை நியமனம் செய்யலாம். அதுவும் ஒன்றிய தலைவர்களுடன் கூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எப்படி முடிவு எடுக்கலாம் என்று கடலூர் பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து, பாஜக நிர்வாகிகள் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், கடலூர் மாவட்ட பாஜக ஓபிசி அணித் தலைவர் கஜேந்திரனும், கட்சி நிர்வாகி செந்தில் முருகனும், பாஜக கட்சித் தலைவர்கள் குறித்து வெளிப்படையாகப் பல விஷயங்களைப் பேசியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய ஆடியோவில் பாஜக நிர்வாகிகள் பேசும்போது, “நான் வினோஜ் கிட்ட போன்லயே பேசிட்டேன். நாங்க நாளைக்கு ராஜினாமா பண்ணிடுவோம். எங்க ஓபிசி அணிய கலைத்து விடுவோம் என்று சொல்லிவிட்டேன். பதவிக்காக எங்களால் கை கட்டிட்டு நிற்க முடியாது. அவங்க எல்லாரும் தலைவர் பண்போடு நடந்துக்க மாட்றாங்க. ஒன்றிய தலைவர்களுடன் கூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எப்படி முடிவு எடுக்கலாம். மருதையன் 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து இந்த தலைவர் பதவியை வாங்கியிருக்கார். நாங்க கஷ்டப்பட்டு கடலூர் மாவட்டம் முழுக்கக் கட்சிக்கு ஆள் சேர்த்து வருகிறோம். ஆனால், எங்களை மதிக்காம புதிதாக வந்தவங்களுக்கு பதவி கொடுக்குறாங்க.
இது குறித்து, அண்ணாமலையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மருதையன், கேசவ நாயருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு செல்போன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார். நிறைய செஞ்சிருக்கார். அது மட்டுமல்ல, வினோஜ்-க்கு கார், நிலம் போன்றவை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என கட்சியில் பேசிக்கிறாங்க...” என்று ஆடியோவில் பேசும் பாஜக நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.