காடையாம்பட்டி அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டெம்போ ஓட்டுநரை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற செந்தில்குமார் (வயது 43). டெம்போ வாகன ஓட்டுநர். இவருடைய மனைவி சங்கீதா (வயது 30). இவர்களுக்கு தேவராஜ் (வயது 14) என்ற மகன் இருக்கிறார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மனைவியை பிரிந்து வாழும் செந்தில்குமார், செம்மாண்டப்பட்டியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன் 8) காலை நீண்ட நேரமாகியும் செந்தில்குமார் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவர் வழக்கமாக இரவு நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழிடாமல், சும்மாவே மூடி வைத்தபடிதான் தூங்குவார். இதனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர் வீட்டிற்குச் சென்று கதவை திறந்து பார்த்தனர். வீட்டுக்குள் அவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர், இதுகுறித்து ஓமலூர் காவல்நிலைய காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள், செந்தில்குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் மோப்ப நாய், நிகழ்விடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற நின்றுவிட்டது. தடயவியல் துறை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
சடலத்தை, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பெண் விவகாரமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.