மதுரை மாவட்டம் பந்தல்குடி என்ற பகுதியில் இருந்து வைகை ஆற்றிற்கு பந்தல்குடி கால்வாய் ஒன்று செல்கிறது. இந்த கால்வாயில் உள்ள கழிவு மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான பணியில் பாண்டியராஜன் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் திடீரென பந்தல்குடி பகுதியில் கால்வாயில் இருந்து அதிக நீர் வந்துள்ளது. அப்போது கால்வாயில் இறங்கி பணியில் ஈடுபட்டிருந்த பாண்டியராஜன் அடித்து செல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கவனித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாண்டியராஜனின் உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் பாண்டியராஜனை கால்வாயில் பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தல்லாகுளம் பகுதியில் விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு படையினர் கால்வாயின் நீருக்குள் இறங்காததால் மீட்புப் பணியில் சுணக்கம் காட்டியதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர். அதோடு ஆத்திரமடைந்த பாண்டியராஜனின் உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மீட்புப் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தாமதம் செய்வதாகக் குற்றம் சாட்டினர். கால்வாயில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை மீட்பதில் அலட்சியம் கட்டுவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் தீயணைப்புத்துறையினர் கால்வாயில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.