சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய விஞ்ஞானியும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற மாநில துணைத் தலைவர் மற்றும் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற ஆளுநர் குழு தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். மேடையில் வைக்கப்பட்ட அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் அறிவியலில் பெண்கள் என்ற தலைப்பில் பேசுகையில் வரலாற்று பெருமை மிக்க இந்த அரங்கத்தில் பங்கேற்று பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் அறிவியலில் பெண்களின் பங்கு 30 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. அறிவியலில் பெண்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் 10-க்கு 8-பேர் சரியாக செய்கின்றனர். அதே ஆண்களிடம் கொடுத்தால் 10-க்கு 5 பேர் செய்கிறார்கள். வாய்ப்புகள் கொடுக்கும் போது பெண்கள் சிறப்பாக அறிவியலில் செயல்படுகிறார்கள். பெண்கள் அறிவியலில் உச்சத்திற்கு வர வேண்டும், அறிவியலில் பெண்களுக்கு பங்கு அதிகம்.
ஆண், பெண் என்ற சரி நிகராக எடுத்துக்கொண்டு கூட்டாக செயல்பட்டால் இமாலய வெற்றிகளை பெறலாம், அறிவியலில் இருக்கும் வாய்ப்புகளை தாய்மொழியில் படித்தால் அறிவியல் எளிதில் புரிந்துகொள்ள முடியும், அறிவியலில் சுயசிந்தனை அதிகமாகி அடுத்த கட்ட நோக்கத்திற்கு செல்லும். மாணவர்கள் முதல் பத்து வருடம் தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும், அமெரிக்கா இந்திய அறிவியலுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அறிவியலில் வெற்றி பெற இளைஞர்கள், இளம்பெண்கள் சரியாக விழித்துக் கொள்ள வேண்டும். அறிவியலை கற்க தற்போது தேவையாக ஸ்மார்ட்போன் தேவைபடுகிறது. அதேநேரத்தில் ஸ்மார்ட்போனில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு இதில் நல்லதை மட்டும் பயன்படுத்தி இளம்பெண்கள், இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும்.
சில நேரங்களில் அச்சத்துடன் செயல்பட வேண்டும், அதே சில நேரத்தில் அச்சத்தைத் தவிர்த்தும் செயல்பட வேண்டும். உதாரணமாக வறுமையில் அச்சம் தவிர், மேடைப்பேச்சில் அச்சம் தவிர், அரசு பள்ளியில் படிப்பது அச்சம் தவிர், சாதி மதம் ரத்தத்தில் இல்லை எனக் கருதி அச்சம் தவிர், தனிமை என்ற அச்சம் தவிர்" என மாணவர்களுக்கு அறிவியல் குறித்து உத்வேகம் ஏற்படும் வகையில் பேசினார். இதற்கு அரங்கத்தில் உள்ள மாணவ மாணவிகள் கைதட்டி வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "பெண்கள் அறிவியலில் பங்கெடுக்க வருவதற்கு அறிவியலில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு தமிழக அளவிலும் பாராட்டு தெரிவிப்பது, அறிவியல் தினத்தை தமிழக அளவில் கொண்டாடுவது என 18 வகையான திட்டங்களை நடைமுறைபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் செலுத்தும் போது பூஜை, புனஸ்காரங்கள் செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு அது நம்பிக்கை மட்டுமே சார்ந்தது அறிவியலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை" என கூறினார்.
இதனைத்தொடர்ந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் வட்டத்தை சுற்றியுள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல்வேறு அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின மைய இயக்குனர் சீனிவாசன், அறிவியல் புல முதல்வர் கபிலன் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.