தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 2018&19 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. தமிழக அரசின் மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய ஆசிரியர்களை நியமிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு பள்ளிகளில் 349 தமிழாசிரியர்கள், 273 ஆங்கில ஆசிரியர்கள், 490 கணித ஆசிரியர்கள், 773 அறிவியல் ஆசிரியர்கள், 520 சமூக அறிவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 2405 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 05.03.2018 அன்றுள்ள நிலவரமாகும். 01.12.2017 அன்று நிலவரப்படி காலியிடங்கள் எண்ணிக்கை 2084 ஆகும். இதில் மாவட்ட வாரியான காலியிடங்களைப் பார்த்தால் 78% காலியிடங்கள் வட மாவட்டங்களில் தான் உள்ளன. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 383 காலியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 381, வேலூர் மாவட்டத்தில் 335, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 271 என 4 மாவட்டங்களில் மட்டும் 1370 காலியிடங்கள் உள்ளன. இது மொத்த காலியிடங்களில் மூன்றில் இரண்டு பங்காகும். மாநிலத்தின் மொத்த காலியிடங்களில் 66% காலியிடங்களை 4 மாவட்டங்களில் மட்டும் வைத்திருப்பது அந்த மாவட்டங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறில்லை.
இந்த நிலை இன்று... நேற்றல்ல... 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி 5 இடங்களில் மாறி மாறி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆக, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் போதிய அளவில் தேர்ச்சி பெற முடியாததற்கு அவர்கள் காரணமல்ல, அவர்களுக்கு பாடம் கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காத அரசு தான் காரணம் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இதனால் சில மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக சென்னை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலியிடங்களே இல்லை என்பதுடன், அங்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாகவும் ஆசிரியர்கள் உள்ளனர். மதுரை, தூத்துக்குடி (தலா 2), கோவை, கரூர், திருச்சி (தலா 3), சிவகங்கை (4), இராமநாதபுரம் (8) ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் காலியிடங்கள் உள்ளன. ஆசிரியர்களை நியமிப்பதில் மாவட்டங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவது எந்த வகையில் நியாயம்? பின்தங்கிய மாவட்டங்களின் மாணவர்கள் முன்னேற வேண்டாமா.... பின்தங்கியே கிடக்க வேண்டுமா? இந்த நிலையை மாற்ற தமிழக அரசு தயாராகக் கூட இல்லை என்பது தான் கொடுமை.
தமிழ்நாட்டில் கடந்த 2013, 2017-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் வேலை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, இப்போது காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் காலியாகும் பணியிடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். கிராமப்புற பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப் படி, பதவி உயர்வில் முன்னுரிமை ஆகியவற்றையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.