
தேனியில் பள்ளி மாணவன் ஒருவன் கஞ்சா வாங்கி தராததால் சக நண்பர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் மாதவன். கடந்த 18ம் தேதி மாதவன் விளையாடச் சென்ற நிலையில் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. போலீசாரும் சிறுவனை தேடிவந்த நிலையில் பாழடைந்த கிணறு ஒன்றில் சிறுவன் மாதவனை சடலமாக போலீசார் கண்டெடுத்தனர்.

மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அவரது சக நண்பர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்பொழுது அல்லாபிச்சை என்ற இளைஞரும் விசாரணை வளையத்திற்குள் வர, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா வாங்கித் தர சொல்லி மாதவனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் சிறுவன் கஞ்சா வாங்கிக் கொடுக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். கஞ்சா வாங்கித் தராததால் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.