மயிலாடுதுறையில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 9ம் வகுப்பு மாணவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மயிலாடுதுறை நகரத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் சீனிவாசன். இவர் அதே பள்ளியில் மாணவர்களுக்கான விடுதியில் வார்டனாகவும் பணியாற்றி வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவர்களிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவன், அதே பள்ளியில் வீட்டிலிருந்து வந்து படிக்கும் தனது தம்பி மூலம் தனது தாயாரிடம் இந்த விவகாரத்தைத் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்தச் சிறுவனின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகமும் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரைப் பள்ளியில் இருந்து நீக்கினர். அதோடு பள்ளி சார்பிலும் ஒரு புகாரை காவல்நிலையத்தில் அளித்தனர்.
இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், அவமானம் தாங்காத ஆசிரியர் சீனிவாசன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சிகிச்சை முடிந்த நிலையில் (நேற்று 20ம் தேதி) அவரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் சீனிவாசன், மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சோதனைக்குப் பின் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், ஆசிரியர் பல்வேறு மாணவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.