75வது சுதந்திர தினத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ப.விராலிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண்துறை சார்பில் திட்டங்களை துறைச் சேர்ந்த அலுவலர் விளக்கி சொல்லிக் கொண்டிருந்தபோது, அப்போது குறுக்கிட்ட அப்பகுதி விவசாயி, ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இருக்கிறது. தற்போது ஆடி முடிந்தும், விதை கொடுக்கவில்லை. எப்போது நாங்கள் விதைப்பது, அலுவலகத்திற்கு வந்த கடலை விதை எங்கே? எங்கள் பகுதியில் கடலை விதை கொடுக்கவில்லை ஏன்? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு வேளாண் துறை அலுவலரிடம் மல்லுக்கட்டும் விதமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்திற்கு ஊர்வலமாக வந்த 100- க்கும் மேற்பட்ட விராலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு போதிய அடிப்படை வசதி இல்லை. பள்ளிக்கு கூடுதலாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்து கிராம சபை கூட்டத்தில் முறையிட்டனர். நடவடிக்கை எடுக்கும் விதமாக, மாணவர்களின் கோரிக்கை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.