நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.