"காசு வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்க.. உங்கள் உரிமையை விலை பேசி விற்காதீங்க" என்பதை வலியுறுத்தி 9 வயது சிறுமி வர்ஷிகா இரண்டு மணி நேரத்தில் 23 கி.மீ. ஓடி நோபல் உலக சாதனையில் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் நோபல் உலக சாதனைக்கான நிகழ்ச்சி தமிழ்நாடு பளுதூக்கும் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து- மாலா தம்பதியரின் மகள் வர்ஷிகா என்ற 9 வயது சிறுமி கலந்துகொண்டு "காசுக்கு ஓட்டுப் போடாதீங்க.. உங்கள் உரிமையை விற்காதீங்க" என்பதை வலியுறுத்தி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அதிராம்பட்டினம் சாலையில் 11 கி.மீ. தூரம் ஓடி மீண்டும் பட்டுக்கோட்டைக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் 23 கி.மீ. தூரத்தைக் கடந்துவந்து நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.
சிறுமியின் விழிப்புணர்வு ஓட்டத்தை சார் ஆட்சியர் பாலச்சந்தர், டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து நோபல் உலக சாதனை நடுவர் அர்ச்சுனன் முன்னிலையில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் சாதனை சான்றிதழை வழங்கினார்.
இது குறித்து மாணவி கூறும்போது, "விலைமதிப்பற்ற நம் வாக்குகளை விலைக்கு விற்றுவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு மணி நேரத்தில் 23 கி.மீ. தூரத்தைக் கடந்தேன். இது நோபல் சாதனையாக உள்ளதால் சான்றிதழ் வழங்கினார்கள்" என்றார். இந்தச் சாதனை சிறுமி தனியார்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சிறுமிகள் சிவானி, ஹரிணி ஆகிய இருவரும் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். சிறுமிகளின் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.