“தம்பி இன்னும் தீபாவளியை மறக்கல போல...” விடுமுறை முடிந்து சோகமாக பள்ளிக்குச் செல்லும் மாணவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளித் திருநாள் கடந்த 24-ஆம் தேதியன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி இந்தாண்டு திங்கட்கிழமையில் வந்துள்ளதால் சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பலரும் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர்.
ஆனால், தீபாவளிக்கு அடுத்த நாள் வேலை நாள் என்பதால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்புவது பலருக்கும் கடினமாக அமைந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில்,அக்டோபர் 25ம் தேதியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்த தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சொந்த ஊர் சென்ற பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அப்பா வாங்கிக் கொடுத்தப் பட்டாசுகளை வெடிப்பதும், வீட்டில் செய்த பலகாரங்களை உண்பதும் என வீட்டுப் பெரியவர்களை விட பள்ளி மாணவர்களே மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.இதையடுத்து,26ம் தேதியான நேற்று வழக்கம்போல் பள்ளிகள் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின.
இந்த நிலையில், பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி மாணவர் ஒருவர் அவரின் அம்மாவுடன் பள்ளிக்குச் செல்கிறான். அப்போது அந்த மாணவன் டூவீலரில் ஒன் சைடு உட்கார்ந்து கொண்டு, கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக பள்ளிக்குச் செல்கிறான். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தீபாவளிக்கு ரெண்டு நாள் லீவு சேர்ந்து எடுத்துட்டு, இன்னைக்குதான் ஸ்கூலுக்கு போறான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.