சேலத்தில், செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேகதர்ஷினி என்ற ஒரு மகளும் இருந்தாள். கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராமச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதையடுத்து மூத்த மகன் கார்த்தி குடும்ப பொறுப்புகளை ஏற்றார். மாணவி மேகதர்ஷினிக்கு செல்போன் மீது கொள்ளை பிரியம் இருந்து வந்துள்ளது. டிரைவராக உள்ள கார்த்தி வீட்டுக்கு வந்ததும் அவருடைய செல்போனை எடுத்து அதில் நீண்ட நேரம் விளையாடி வந்துள்ளார்.
இப்படி அடிக்கடி என்னுடைய செல்போனை எடுத்து விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி? என்று கார்த்தி, தங்கையை கண்டித்துள்ளார். அதற்கு அவர், அப்படியெனில் எனக்கு தனியாக ஒரு செல்போன் வாங்கி கொடு என்று கேட்டாராம். அதற்கு மறுத்த கார்த்தி, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் புதிதாக செல்போன் வாங்கிக் கொடுக்கிறேன் என்று தங்கையிடம் கூறியுள்ளார்.
இதனால் அண்ணன், தங்கை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை தாயார் சமாதானப்படுத்தினார். பலமுறை செல்போன் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டும் கிடைக்காத விரக்தியில் இருந்த மேகதர்ஷினி தற்கொலை செய்து கொள்ளும் முடிவில், இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து விட்டார்.
வீட்டில் மகள் மயங்கிக் கிடப்பதை அறிந்த அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை (செப்டம்பர் 12, 2018) மேகதர்ஷினி பரிதாபமாக உயிர் இழந்தார். கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். செல்போன் மீதான மோகம் பள்ளி மாணவியின் உயிரை காவு வாங்கிய நிகழ்வு அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.