விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் - சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் பாலமுருகன் சாத்தூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாலமுருகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பிறகு மேல்சிக்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பாலமுருகன் உயிரிழந்தார். பாலமுருகன் இறந்ததைத் தொடர்ந்து, “சாத்தூர் அருகிலுள்ள சங்கரநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. கழிவுநீர்க் கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை. முறையாக குப்பைக்கழிவுகள் அப்புறப்படுத்துவதில்லை” எனப் பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், கழிவுநீர்க் கால்வாய் வசதி இல்லாததால் இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், அதனாலேயே இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்றும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும், நோய்த்தொற்று பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைக் காத்திட வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.