அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பத்தி நல்லூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன், லலிதா தம்பதிக்கு மணிகண்டன், முருகன் என இரண்டு ஆண் பிள்ளைகள். இவர்களின் தாய் லலிதா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு சில மாதங்களில் மதியழகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மேலும், தனது இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு அவரும் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மணிகண்டன் அதே ஊரில் உள்ள தனது தந்தை வழி பாட்டி பாப்பாத்தியுடன் தங்கி படித்து வந்துள்ளார். முருகன் தனது பெரியம்மா ஊரான அமிர்தராயன்பேட்டைக்கு சென்று தனது சித்தி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு முடித்த மணிகண்டனை அவரது பாட்டி பாப்பாத்தி பிளஸ் ஒன் படிப்பதற்காக அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்ததோடு அங்குள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கவைத்து வந்துள்ளார். தற்போது தேர்வு நடந்து வருவதால் அதற்காக வீட்டில் வந்து தங்கி படித்து தேர்வு எழுதி வந்துள்ளார் மணிகண்டன். நேற்றிரவு தனது பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் தாய் தந்தை ஏற்கனவே வசித்து வந்த வீட்டுக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் மணிகண்டன் எழுந்துவராததால், அவரது பாட்டி அந்த வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டன் இரத்த வெள்ளத்தில் மரணமடைந்திருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி, சத்தம்போட்டு அழுதுள்ளார். அவரின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது மணிகண்டன் தலையில் கல்லை போட்டு நசுக்கபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக தா.பழூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவன் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.