சிறுவாணி அணையில் 50 அடிக்கு நீரை தேக்கி வைக்க மறுக்கும் கேரள அரசை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மக்களின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாக உள்ளது. எனினும் கேரள அரசு சிறுவாணி அணையில் 42 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்கிறது. அதற்கு மேல் தண்ணீரை தேக்காமல் திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்,அணையில் தண்ணீரை முழு கொள்ளவை எட்ட விடாமல் தண்ணீரை கேரள அரசு வீணாக்குவதை கண்டித்து கோவை காந்திபுரத்தில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன், கேரள அரசின், இந்த நடவடிக்கையால் கோவையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக மக்களை கேரள அரசு வேண்டுமென்றே வஞ்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் ராமகிருட்டிணன் வலியுறுத்தினார்.