பொன்பரப்பி கலவரத்தை தொடர்ந்து சமூக மோதலை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் இருதரப்பு மக்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வீ.அன்புச்செல்வனும், காவல் கண்காணிப்பாளர் சரவணனும் சமூக அமைதியை குலைக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணமாக வாட்ஸ் அப் மூலம் செய்திகள் / வீடியோக்கள் ஆகியவற்றை பரப்பி மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயன்று வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுவார்கள் என்றும், கடலூர் மாவட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதி செய்துகொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மோதலை தூண்டும் விதமாக பேசி வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விருத்தாசலத்தை சேர்ந்த சிறுத்தை சிவக்குமார் (38) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேலும் தொண்டமாநத்தத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (71), காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த அருள்ராஜ் (28), குண்டியமல்லூர் கிராமத்தை சேர்ந்த சவுரிராஜன் (25) ஆகியோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் எச்சரிக்கை செய்தும் எச்சரிக்கையை மீறி இதுபோன்ற வீடியோக்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து மூன்று பேரை அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.