விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது கண்டமானடி கிராமம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து படிக்கிறார்கள். இவர்களில் சில மாணவர்களுக்கு இடையே சமீபத்தில் கோஷ்டி மோதல் உருவாகி அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷூகு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்ற உதவி ஆய்வாளர் பிரகாஷ் மாணவ மாணவிகள் அனைவரையும் பள்ளி வளாகத்தில் வரிசைப்படுத்தி நிற்க வைத்து, அவர்களுக்கு போதை பொருள், ஒழுக்கம், சாதி சமயம் பற்றிய விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை எடுத்துக்கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் முதலில் கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் இருந்து ஒழுக்கம் பற்றிய பத்து குறள்களை ஐந்து முறை எழுதும்படி அறிவுறுத்தினார். அவைகளை எழுதிக் காட்டிய மாணவர்களிடம் "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற திருக்குறளை கூறி அதற்கான விளக்கத்தையும் எடுத்துரைத்து அறிவுரை வழங்கினார்.
அடுத்து மாணவர்களிடையே ஒற்றுமை பற்றி எடுத்துக்கூறினார். இதையடுத்து மாணவர்கள் ஒருவருக்கொருவர் பகைமை மறந்து சந்தோசமாக கைகுலுக்கிக் கொண்டனர். இதுபோன்று எப்போதும் இருக்கவேண்டும். உங்களைப் பார்த்து மற்ற பள்ளி மாணவர்களும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக இருக்க நீங்கள் ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
இந்த தகவல் பலருக்கும் பல இடங்களுக்கும் பரவியது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பிரகாஷை பலரும் பாராட்டி வருகிறார்கள். சிறு பொறி பெரும் தீ என்பதுபோல் இளவயது மாணவர்கள் மத்தியில் சிறு கோபம் பெரும் கலவரமாக மாறக்கூடாது. அதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்துரைக்க பள்ளிகளுக்கு அறிஞர் பெருமக்களை அழைத்து வர வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.