Published on 08/12/2021 | Edited on 08/12/2021

மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் நேரடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்பு சம்பந்தப்பட்ட பள்ளி மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
அதன் பின்னர் மாணவியின் பெற்றோர், தாலி கட்டிய இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையினர் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளி மாணவி தாலியுடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.