கோவையில் சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் முதல்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று கோவையில் உள்ள மாணவியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து அங்கு வந்த கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அதனையடுத்து அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்வதற்காகத் தொடர்ந்து இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அங்கிருந்து அவரை கோவை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி முதல்வரிடம் மாணவி பலமுறை பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் பள்ளி முதல்வரைக் கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.