நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (17.12.2021) மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இதுபோல் சிதிலமடைந்திருக்கும் பள்ளி கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள 325 பள்ளி கட்டடங்களில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளி கட்டடங்களை இடிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், மதுரையில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் 120 வகுப்பறை கட்டடங்கள், 80 கழிப்பறை கட்டடங்கள் என மொத்தம் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க திருச்சி இனாம் மாத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று தண்ணீரில் மிதக்கும் அளவிற்குக் குளமாக காட்சியளிக்கிறது. பள்ளி கட்டடங்கள் குறித்து சோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு பள்ளியே ஆபத்தான நிலையில் நீர்நிலையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒருமாத காலமாக இப்படி நீர் தேங்கியிருப்பதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பள்ளியே குளம் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. 2006 - 2008 ஆண்டுகளில் இந்தப் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு 2012ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. பள்ளி வளாகத்தில் இப்படி குளம்போல நீர் தேங்குவதால் வகுப்புகள் எடுக்கச் சிரமமாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
“அந்தப் பள்ளியில் எந்த வகுப்பும் நடத்தக் கூடாது என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம். இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும். மோட்டர் வைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொஞ்சம் நில ஆக்கிரமிப்பும் இருந்தது. இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும்” என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உறுதியளித்துள்ளார்.