8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் போது காவல்துறையால் நில உரிமையாளர்கள் தாக்கப்படுவதற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், திட்டத்திற்கான அரசாணையை எதிர்த்தும் வக்கீல்கள் சூரியபிரகாசம், வி.பாலு உள்ளிட்டோரும் தருமபுரியைச் சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த வழக்கிற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், திருவனந்தபுரம் - நாகர்கோவில் சாலை திட்டம் நடந்தது எப்படி? தங்களுக்கு பாதகமாக திட்டம் வருவதாக நினைத்தால் எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதற்காக அதிகாரிகள் அத்துமீறக்கூடாது என்றனர்.
அப்போது, கிருஷ்ணமூர்த்தி சார்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகி, நிலத்தை அளவீடு செய்ய செல்லும்போது நில உரிமையாளர்களை போலீசார் கடுமையாக தாக்குகிறார்கள் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், நாங்களும் தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் இந்த கொடுமையை பார்த்தோம். மக்களை அணுகுவதில் அதிகாரிகளுக்கு நிதானம் தேவை. வாகனங்கள் எவ்வளவு விரைவாக செல்ல வேண்டும் என்பதில் உள்ள அக்கறை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதிலும் இருக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் போது போலீசாரும் அத்துமீறக் கூடாது. வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை கீழே தள்ளிவிடுவது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சிகளை வைக்கும் பேனர்களை அகற்றுவதில் இந்த வேகத்தைக் காட்டுங்கள் என்றனர்.
அப்போது, வக்கீல் வி.பாலு, “சென்னையிலிருந்து 3 மணி நேரத்திற்குள் சேலம் செல்வது சாத்தியம் அல்ல. சென்னை ஜூரோ பாயிண்டிலிருந்து தாம்பரம் செல்ல எத்தனை மணிநேரம் ஆகும் என்று அனைவருக்கும் தெரியும். திட்டத்தை தொடங்கும் இடத்திலிருந்து சென்னை ஜீரோ பாயிண்ட் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதேபோல்தான், சேலத்திற்குள் நுழைவதற்கும் நீண்ட நேரம் ஆகும். சாத்தியமில்லாத ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்பை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை. திட்டம் மத்திய அரசுடையது என்றாலும் செயல்படுத்துவது தமிழக அரசுதான். அதனால்தான் நிலம் அளவீடு தொடங்கப்பட்டது. போலீசார் கடினமாக செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த திட்டம் குறித்து மத்திய அரசு விரிவான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.