நெல்லை மாவட்டத்தின் திசையன்விளையைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் முறையே 10 மற்றும் 9ம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாணவி பள்ளியில் இறுதியாண்டு தேர்வு எழுதியிருக்கிறார். அது சமயம் அவரை சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர், மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோர் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி இனிமேல் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளாராம். இருப்பினும் அவரைப் பெற்றோர் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில் இரவு வீட்டில் தனியாக இருந்த மாணவி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகள் தூக்கில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
தகவல் போய் சம்பவ இடம் வந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜாமல் உள்ளிட்ட போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியவர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.
இதனிடையே மாணவியின் இறப்பிற்குக் காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பரபரப்பான சூழலில் ஸ்பாட்டுக்கு வந்த வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமயசிங் மீனா மற்றும் நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குற்றத் தடுப்பு யூனிட்டின் டி.எஸ்.பி. காந்தி ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியுடன் படித்த சக மாணவ மாணவிகள், மற்றும் ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தி ஆசிரியைகள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்னதையடுத்து மாணவியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
மாணவியின் விபரீத தற்கொலை சம்பவம், திசையன்விளைப் பகுதியை சோகத்திலாழ்த்தியுள்ளது.