திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் மலை கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் - பிரியதர்ஷினி தம்பதியின் இரண்டாவது மகளான ஒன்பது வயது மாணவி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார்.
இது சம்பந்தமாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகிறார்கள். அதோடு டி.ஐ.ஜி. விஜயகுமாரி, எஸ்.பி. சீனிவாசன், ஏ.டி.எஸ்.பி. லாவண்யா, கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையிலான போலீசார் பள்ளியில் பணிபுரிந்துவந்த தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள், பள்ளியில் படித்துவந்த மாணவர்கள், பாச்சலூரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என 250 பேரிடம் தீவிர விசாரணை செய்துள்ளனர். ஆனால், மாணவி மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றவாளி யார் என்பதையும் ஊர்ஜிதம் செய்ய முடியாமல் போலீசார் திணறிவருகிறார்கள்.
மற்றொருபுறம் மலைக் கிராம மாணவி மரணத்துக்குக் காரணமான குற்றவாளியைக் கைது செய்யக் கோரி மேல்மலை, கீழ்மலை பகுதியிலுள்ள கூக்கல், மன்னவனூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களைப் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில்தான், மாணவியின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளியைக் கைது செய்யக் கோரி திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே இருக்கும் கல்லறை மேடு பகுதியில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிகரன், வெள்ளாள சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி உள்பட மாநில பொறுப்பாளர்கள், மக்கள் என பெருந்திரளாக கலந்துகொண்டு குற்றவாளியைக் கைது செய்யக் கோரி கண்டன குரல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதில் வெள்ளாள சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி பேசும்போது, “ஒன்பது வயதான மாணவி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டு ஒருவாரம் ஆகிறது. அப்படியிருந்தும் போலீசார் இன்னும் குற்றவாளியைப் பிடிக்காமல் வேடிக்கை பார்த்துவருவது கண்டனத்துக்குரியதாகும். அதனால போலீசார் இனியும் மெத்தனம் காட்டாமல் உடனடியாக குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாநில அளவில் போராட்டம் நடத்தக்கூட தயங்கமாட்டோம்” என்று கூறினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை வ.உ.சி. சிலை அருகே நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்குப் போலீசார் மறுப்பு தெரிவிக்கவே, அதன் அருகே உள்ள கல்லறை பகுதியில் நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.