கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்காக கடந்த காலங்களில் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது நிலம் மற்றும் வீடு கொடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும், 2000 வருடம் முதல் 2020 ஆம் வருடம் வரை நிலம் கொடுத்த அனைவருக்கும் சமமான இழப்பீடு, சமமான வாழ்வாதாரம், மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும், முழுமையாகப் பராமரிக்க வேண்டும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை எப்பொழுதும் தனியாருக்கு கொடுக்கக் கூடாது, சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு தேவையான சுகாதார மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.