இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நேற்று இந்தியா முழுக்க வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்த சுதந்திர தினவிழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சமாதான வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டார். பின்னர் நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஆயுதப்படை போலீசார் துப்பாக்கிகளை பிடித்தபடி வீரநடை போட்டு அணிவகுத்தனர். மேலும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதேபோல், கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, சமாதான புறாவை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து 59 பயனாளிக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் என 405 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.