கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமி, அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கச்சராபாளையம் காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரை ஏற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி அடுத்துள்ள சோமண்டார்குடி ஊமை ஆற்று ஓரமாக தண்ணீரில் பெண் பிள்ளை சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, இறந்து கிடப்பது மாணவிதான் என்பதை அவரது பெற்றோர்கள் மூலம் அடையாளம் கண்டறிந்தனர். மேலும், வாலிபர் ஒருவர் அதே பகுதியில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜவகர்லால், டி.எஸ்.பி. ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, ஆனந்தராஜ் உள்ளிட்ட போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அதில், தூக்கில் தொங்கியது ஒரு பள்ளி மாணவன் என்பது தெரியவந்தது. அருவரது சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மரத்தில் தூக்கில் தொங்கிய மாணவன் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கும் ஆற்றில் சடலமாக இருந்த சிறுமி இவரும் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இறந்துபோன மாணவி மாணவன் ஆகிய இரு குடும்பத்தாரிடமும் போலீசார் தனித்தனி புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன மாணவன் மாணவி இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இருவருக்கும் இடையில் காதல் இருந்திருக்குமா இது பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏதாவது உருவாகும் என்று பயந்து போய் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.