Skip to main content

அரசு பள்ளிகளை காக்க விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தும் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

 

பொதுவாக அரசு பள்ளியென்றால் பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல ஒரு சில அரசு பள்ளி ஆசிரியர்களிடமும் இந்த எண்ணம் உள்ளதால் அவர்களின் பிள்ளைகளை கூட அரசு பள்ளிகளில் சேர்க்க மறுத்து தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதற்கு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

 

s

 

இதனால் ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்கள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி தனியார் பள்ளிதான் உயர்ந்த பள்ளி என்று அவர்களது பிள்ளைகளை சேர்த்து வருகிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவில் உள்ளது. சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நல்லமுறையில் தனியார் பள்ளிகளை தாண்டி கல்வி மட்டுமில்லாமல் விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த கல்வியை உணர்வு பூர்வமாக கற்பிக்கிறார்கள். இதனால் இது போன்ற அரசு பள்ளிகளில் மாணவர்களின் கூட்டம் குறையாமல் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் அரசு பள்ளிகளை காக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கடலூர், சென்னை, கோவை, கன்னியாகுமாரி உள்ளிட்ட நான்கு முனைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெய்யிலில் அரசு பள்ளிகளை காக்க வேண்டும் என்ற கோசத்துடன் சைக்கிள் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

s

 

நான்கு முனையில் இருந்து வரும் மாணவர்கள் வரும் 31-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலுந்து கொள்கிறார்கள். பொது கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி ஜானு, திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் அரசு பள்ளிகளை காக்க முக்கிய தீர்மாணங்கள் இயற்றப்படவுள்ளது.

 

இந்தநிலையில் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு பள்ளிகளில் படித்து தொழில்அதிபராக உள்ளவர்கள், பொருளாதரத்தில் உயர்ந்துள்ளவர்கள். உயர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அரசு பள்ளிகளை காக்க இப்படி பலகட்ட முயற்சிகள் எடுத்துவந்த நிலையில் புதுச்சேரியிலுள்ள அரசு பள்ளியில் 30 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி புதுச்சேரி அரசின் கலைமாமணி மற்றும் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற ரெ.ரவி (63) ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு சென்று அரசு பள்ளிகளின் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார். இதற்கென்று அவர் பணம் கேட்பது இல்லை. இது அனைவரின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பள்ளியின் சுவற்றில் ஓவியம் வரையும் போது ஓவியத்தை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சாலையில் செல்லுபவர்கள் இதுகுறித்து விசாரித்து ஓவியம் வரைய பெயிண்ட் உள்ளிட்ட சிறு உதவிகளை தானக முன்வந்து செய்து வருகிறார்கள்.

 

சிதம்பரம் நகரம் மனாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி சுவற்றில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துகொண்டிருந்த அவரிடம் பேசினோம். நான் ஓய்வு பெற்றவுடன் ஓவிய ஆசிரியரான  எனது மனைவி காந்திமதியுடன் இணைந்து 60 மாணவர்களை கொண்டு ஓவிய பயிற்ச்சி பள்ளியை தொடங்கினேன். அதேநேரத்தில் தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரித்துள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதை எண்ணி வருத்தபட்டுள்ளேன். இதனால் ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் கடனவுடன வாங்கி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை கண்கூடாக பார்த்தேன்.

 

இதனால் வேதனையடைந்த நான் ஓவிய பயிற்ச்சி பள்ளியை கலைத்துவிட்டு எனது மனைவி மற்றும் என்னுடன் பணியாற்றிய 15 ஓவிய ஆசிரியர்களை கொண்டு சன் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வாசகங்களை எழுதி வருகிறோம். இதனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். இதனால் எங்களுக்கு மனநிம்மதி ஏற்படுகிறது. அரசு பள்ளிகளை காக்க இந்த பணியை தொடர்ந்து செய்வோம் என்கிறார் அந்த ஓய்வு பெற்ற ஓவியர்.

 

பள்ளிகள் திறக்க முன்றே நாட்களே உள்ள இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்து தரப்பு பெற்றோர்களையும் ஈர்த்து அரசு பள்ளிகளில் மாணர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளை தான்டி மாணவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோர்கள் விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்