அட்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று சின்னஞ்சிறிய நகைக்கடைகள் முதல் பிரமாண்டமான நகைக்கடைகள் வரை சேதாரம் சலுகை கொடுத்து விளம்பரங்கள் செய்தனர். இந்த விளம்பரங்களில் நம்பிக்கையுள்ள ஆயிரக்கணக்கானோர் நகைக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று நகை வாங்கிச் சென்றனர்.
மற்றொரு பக்கம் தங்கம் வாங்குவதை விட அரிசி வாங்கி வையுங்கள் உங்கள் பசியை போக்கும் விவசாயிகளும் வாழ்வார்கள் என்ற சமூகவலைதள பிரச்சாரங்களும் பரவியது. இதையெல்லாம் கடந்து மக்கள் பிரச்சனைகளை அரசுக்கும், மக்களுக்கும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட நூதன போராட்டங்களை நடத்தியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திங்கட்கிழமை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வாகனங்களையும் எரிவாயு உருளைகளையும் தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்று எரிபொருள் வாங்க வங்கியில் கடன் கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய் கிழமை அட்சய திருதியை நாளில் புதுக்கோட்டையில் நகைக்கடைகள் அதிகம் உள்ள கீழராஜ வீதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் திரண்ட கட்சியினர், அட்சய திருதியையில் தங்கம் சேமிப்பதை காட்டிலும் தண்ணீர் சேமிப்பதே மேலானது என்ற பதாகையுடன் தங்கம் வைக்கும் பெட்டியில் தண்ணீர் பாட்டில்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த வழியில் சென்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கியதுடன், 'தண்ணீரை சேமியுங்கள் உங்கள் சந்ததி வாழும் தங்கம் சேமிப்பதால் யாருக்கும் பயனில்லை' என்று விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.