சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளார். அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். நேற்று மதியம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளான்.
அப்பொழுது மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார். மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சதீஸிற்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் மாணவி சத்யபிரியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் மனதை உலுக்கியது. மாணவியின் உடலுக்கு பலர் மாலை அணிவிக்க முயன்ற நிலையில் உறவினர்கள் சத்யா ''சத்யா சாகல... மாலை போடாதீங்க... எழுந்து வா மா... என்று கூறி கண்ணீர் விட்டு கதறினர். ஏற்கனவே இந்த சம்பவம் நிகழ்ந்த சோகத்தில் மாணவியின் தந்தை உயிரிழந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.