ஊரடங்கினால் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சாத்தூரில் நடந்திருப்பதும் குடும்ப வன்முறை சம்பவம்தான். மாரிக்கண்ணன் என்பவர் தனது ஒரு வயது ஆண் குழந்தை மவுனி கணேசனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக, சாத்தூர் வட்டம் – இருக்கன்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
என்ன விவகாரமாம்??
ஏதோ ஒரு காரணத்தால், தனது அத்தை மகள் சங்கரேஸ்வரியை திருமணம் செய்வதற்கு ஆரம்பத்திலேயே மறுப்பு தெரிவித்திருக்கிறார், மாரிக்கண்ணன். ஆனாலும், குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் நடந்திருக்கிறது. இரண்டாண்டு திருமண வாழ்க்கையில் மவுனி கணேசன் பிறந்திருக்கிறான். ஆனாலும், மாரிக்கண்ணனுக்கும், சங்கரேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. கோபித்துக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியிலுள்ள தாய் வீட்டிற்குச் செல்வதை சங்கரேஸ்வரி வழக்கமாக கொண்டிருந்தாள்.
கடந்த 18-ஆம் தேதி தாய் வீட்டிலிருந்து சாத்தூர் வட்டம் – போத்திரெட்டிபட்டியிலுள்ள கணவன் மாரிக்கண்ணன் வீட்டுக்கு சங்கரேஸ்வரி வந்திருக்கிறார். அன்றும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை நடந்திருக்கிறது. அதனால் வெறுத்துப்போய், தன்னுடைய குழந்தை மவுனி கணேசனை டூ வீலரில் வெளியே அழைத்துச் சென்றார் மாரிக்கண்ணன். அப்போது ஏதோ நடந்திருக்கிறது குழந்தை இறந்த நிலையில், ஊர் திரும்பிய மாரிக்கண்ணன், டூ வீலரிலிருந்து சரிந்து விழுந்திருக்கிறான். குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார் என்று தகவல் வேகமாக பரவ, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாரிக்கண்ணனை கொண்டு சென்றார்கள். சிகிச்சை பலனின்றி மாரிக்கண்ணனும் இறந்து போனார்.
மாரிக்கண்ணன் உறவினர் தரப்பில், டிரைவர் வேலை என்பதால் வீட்டிலேயே மாரிக்கண்ணன் இருக்க மாட்டார். அந்த நேரத்தில் மனைவி எப்படி நடந்துகொண்டார் என்பதை தெரிந்துகொண்டார். இந்த விவகாரத்தால் இவர்கள் அடிக்கடி சண்டை போட்டனர். இந்தக் குடும்பத் தகராறு, குழந்தையின் பிறப்பு குறித்தும் சந்தேகம் கொள்ள வைத்தது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணித்தான், சோற்றில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விஷம்தான், மாரிக்கண்ணன், மவுனி கணேசன் ஆகிய இருவரையும் சாகடித்துவிட்டது என்று சந்தேகம் கிளப்புகின்றனர்.
காவல்துறை வட்டாரத்திலோ, “அப்பா இல்லாத மாரிக்கண்ணன், தன் தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் மீது அதிக பாசம் காட்டி வந்தார். இது சங்கரேஸ்வரிக்கு அறவே பிடிக்கவில்லை. தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாரிக்கண்ணன் மீது புகார் அளித்தார். எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாமல், நல்ல முறையில் வாழ்ந்த மாரிக்கண்ணன், காவல் நிலைய விசாரணைக்கு ஆளானதை எண்ணி வேதனை அடைந்தார். தன் பெயரிலுள்ள சொத்துகள், தனது இறப்புக்கு பிறகு மனைவியின் கைக்கு போய்விடக்கூடாது என்ற நோக்கத்தோடுதான், விஷம் கொடுத்து குழந்தையை கொலை செய்திருக்கிறார். மனைவி மீது மாரிக்கண்ணனுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மாரிக்கண்ணன் மற்றும் சங்கரேஸ்வரி ஆகிய இருவரது செல்போன்களும் கைப்பற்றப்பட்டு, ‘அழைப்பு விபரங்கள்’ கேட்கப்பட்டுள்ளன. அது கிடைத்ததும், யார், யாரிடம் பேசினார்கள் என்பது தெரியவரும். சங்கரேஸ்வரி தொடர்ந்து காவல்துறையின் விசாரணை வளையத்திலேயே இருக்கிறார்.” என்றனர்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும், இரு மனங்களும் பொருந்திப்போனால், கணவனும் மனைவியும் கருத்தொருமித்தவர்களாக வாழ முடியும் என்றும், தமிழர் பண்பாடு ஒழுங்கு முறையான குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறாக மாரிக்கண்ணன் – சங்கரேஸ்வரி வாழ்க்கை அமைந்து, இரு உயிர்களைப் பறித்துள்ளது.