மேற்கு தொடர்ச்சி மலையான சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் யானை, காட்டெருமை, கரடி, செந்நாய், மான் உட்பட பல விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த ஐந்து வருடமாக இந்த வனப்பகுதியில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தைகள் இனப்பெருக்கம் அதிகரித்து விட்டது. தாய் சிறுத்தைகள் அடர்ந்த காட்டில் குட்டிகளை ஈன்றால் பாதுகாப்பு இல்லை என்று கருதி விட்டதோ என்னவோ இப்போதெல்லாம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
அப்படித்தான் தற்போதும் நிகழ்ந்துள்ளது. தாளவாடி மலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தினேஷ்குமார். இவர் தோட்டம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. 12 ஏக்கர் பரப்பளவுள்ள இவரது தோட்டத்தில் மூன்று ஏக்கர் நிலத்தில் மட்டும் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் (21/02/2020) மதியம் கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தினேஸ் குமார் சென்றுள்ளார். அப்போது கரும்பு தோட்டத்தில் பூனை குட்டி போன்ற ஒரு குட்டி அங்கும் இங்கும் நடமாடியதை கண்டார்.
கொஞ்சம் அருகே சென்று பார்த்தபோது சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது. ஐயோ பக்கத்தில் எங்காவது தாய் சிறுத்தை இருக்குமே என்று அதிர்ச்சியும், பயமும் அடைந்த தினேஷ் குமார் தோட்டத்தை விட்டு வெளியே ஒடி வந்து அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கூறியதோடு சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பிறகு சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அந்த இடத்திற்கு சென்று கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டியை தேடி தேடி பார்த்தனர். சிறுத்தை குட்டியை வனத்துறையினர் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த சிறுத்தை குட்டி எங்காவது புதர் மறைவுக்குள் இருக்கலாம் என வனத்துறையினர் கூறியிருக்கிறார்கள் குட்டியை தேடி தாய் சிறுத்தை வரும் என்பதால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் கரும்புத் தோட்டத்தில் தானியங்கி கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டபின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தனர் .கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி நடமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைவிட தாய் சிறுத்தை வருமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.