Skip to main content

இனி சதுரகிரி மலைக் கோவில்களில் பூஜை கூடாது! -பக்தர்களை நோகடிக்கும் வனத்துறை உத்தரவு!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

s


ஸ்ரீவில்லிபுத்தூர் – வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் தாணிப்பாறை என்ற வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து மலைப் பாதையில் 12 கி.மீ. தூரத்தில் சதுரகிரி இருக்கிறது. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இம்மலையை சிவனாகக் கருதுவதால், பக்தர்கள் பலரும் காலில் செருப்பு இல்லாமல் மலையேறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். 

 

இங்கே சுந்தரமகாலிங்கம் கோவில் மட்டும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராஜயோக காளியம்மன், பேச்சியம்மன், கருப்பணசாமி, வனதுர்க்கை, பிலாவடி கருப்பு என சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் செல்லும் வழியில் ஐந்து கோவில்கள் உள்ளன. சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழிபடுவதற்கு முன், பக்தர்கள் மலையேறும்போது, இந்த ஐந்து கோவில்களிலும் வழிபட்டுவிட்டு,  சற்று இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். வனத்துறைச் சட்டமானது,  பக்தர்களின் இந்த நம்பிக்கையில் குறுக்கிட்டிருக்கிறது.  வனப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கோவில்கள் என இவற்றைப் பட்டியலிட்டிருக்கும் வனத்துறை, இந்தக் கோவில்களில் பூஜை செய்வதற்குப் பூசாரிகளுக்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்’ என பாடியிருக்கிறார் திருநாவுக்கரசர். அதனால், கோவில்களில் காட்டப்படும் தீபமானது, ஞானத்தின் அறிகுறியென்று நம்பப்படுகிறது. கோவில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. தீபாராதனையில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. அதாவது, கற்பூரமானது கடைசிவரை எரிந்துபோகும். எதுவுமே மிஞ்சாது. இறந்தபிறகு மனிதனின் நிலையும் இதுதான். எஞ்சுகிற சாம்பலும்கூட தண்ணீரில் கரைக்கப்பட்டுவிடும். இதை உணர்த்தவே, பூசாரிகள் கோவில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். இறைவனுக்கு நம்மை அர்ப்பணிப்போம் என்ற உணர்வை ஏற்படுத்தும் தீபாராதனை, சதுரகிரிக்கு செல்லும் வழியில் உள்ள ஐந்து கோவில்களிலும் இனி காட்டக்கூடாது என்ற வனத்துறையின் உத்தரவு, மனதைப் புண்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் சதுரகிரி பக்தர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்