சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி அந்நகர காவலர்களால் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை என்ற பெயரால் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 10 பேர்களால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டதில் நிலைகுலைந்து போன ஜெயராஜூம் பென்னிக்ஸ்சும், கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தது தேசத்தையே உலுக்கியது.
தாமாக முன் வந்து வழக்குப் பதிவிட்ட உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட, அதன் ஐ.ஜி. சங்கர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. யூனிட் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எஸ்.ஐ.க்கள் உட்பட 10 பேர்கள் கைதானர்கள். பின்பு இந்த வழக்கு சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்ட்டிற்கு மாற்றப்பட்டு அதன் ஏ.டி.எஸ்.பி.யான விஜயகுமார் சுக்லா தலைமையிலான போலீஸார் குற்றவாளிகள் 8 பேரைக் கஸ்டடி எடுத்து விசாரித்ததுடன் தொடர் விசாரணையாக சாத்தான்குளம் டூ கோவில்பட்டி வரை விசாரணையை நடத்தினர்.
இதனிடையே வழக்கை விசாரணை செய்துவரும் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 பேருக்குக் கரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் இருப்பதால், அடுத்து அதன் விசாரணை அதிகாரியான சி.பி.ஐ.யின் மதுரை டிடாட்ச்மெண்ட்டின் அழகிரிசாமி தலைமையிலான நான்கு போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று மதியம் 12.30 மணிவாக்கில் அழகிரிசாமி தலைமையிலான 4 அதிகாரிகள் சாத்தான்குளம் வந்தனர். அங்கேயுள்ள பென்னிக்ஸ்சின் வழக்கிறிஞரான மணிமாறனின் அலுவலகத்திற்கு வந்து அவரை விசாரித்தனர்.
பென்னிக்ஸ் தன் தந்தையைப் பார்க்க காவல் நிலையம் சென்ற பிறகு அவரது வழக்கறிஞரான மணிமாறன் அங்கு போயிருக்கிறார். சம்பவம் நடந்த போது அங்கு இருந்ததால், நடந்தவைகளை பார்த்த அவர், ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.யினரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் எப்படி இருந்தார்கள். யாரெல்லாம் அங்கு இருந்தார்கள் என்றெல்லாம் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தின் போது வேறு மனு தொடர்பான விசாரணைக்காக அங்கிருந்த ரவிச்சந்திரன் ராஜாராம் இரண்டு வழக்கறிஞர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு தன் நண்பர் சங்கரலிங்கத்துடன் சென்றிருக்கிறார். அவர், மற்றும் நண்பர்களான ரவிசங்கர், சுடலை முத்து ஆகியோரிடமும் விசாரணையை நடத்தியிருக்கிறார் சி.பி.ஐ.யின் அழகிரி சாமி.
அடுத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட ஜெயராஜையும், பென்னிக்சையும் போலீசார் கோவில்பட்டி சிறையிலடைப்பதற்காக வாடகைக் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் டிரைவரான நாகராஜிடம், ஜெயராஜ் பென்னிக்ஸ் எப்படிப்பட்ட நிலையிலிருந்தார்கள். ரத்தக்கறைகளிருந்தனவா. இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று போலீசார் மிரட்டினார்களா? என்றெல்லாம் விசாரித்திருக்கின்றனராம்.
இதுபோன்ற விசாரணை சுமார் நான்குமணி நேரத்திற்கும் மேலாக நடத்திருப்பதாகத் தெரிகிறது. விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இரண்டு வாரமே இருக்கும் நிலையில் சாத்தான்குளம் கொட்டடிக் கொலை விசாரணை, விறு விறுப்பான நிலையை எட்டியிருக்கிறது.