சாத்தான்குளம் விவகாரத்தில் மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையும், காவலர்களிடம் நடத்திய விசாரணையும் ஒத்துப்போனதாக, மதுரை மத்திய சிறையில் 10 காவலர்களிடம் நடத்திய பின்னர் மனித உரிமைகள் ஆணையத்தின் டிஎஸ்பி குமார் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 10 பேரிடம் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் மத்திய சிறையில் நேரடியாக விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர், சிறைத்துறை, மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஆகியோர் அறிக்கை அளிக்க ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி-யான குமார் கடந்த 4 நாட்களாக சாத்தான்குளம் மற்றும் நெல்லையில் விசாரணை நடத்தினார். குறிப்பாக ஜெயராஜின் மனைவி, மகள்கள் உள்ளிட்ட உறவினர்கள், கோவில்பட்டி சிறையில் இருந்து பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்ற 3 சிறை காவலர்கள் கோவில்பட்டி ஜெயில் சூப்பிரண்ட் சங்கர், டாக்டர் விண்ணிலா, டாக்டர் வெங்கடேஷ், சாத்தான்குளம் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் மற்றும் இருவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பாளையங்கோட்டை அரசு மருத்துவர்கள் 3 பேரிடம் என மொத்தம் 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்களிடன் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை சுமார் 2 மணி நேரமாக தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளார்.
விசாரணை முடித்து வந்த டிஎஸ்பி குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இரண்டு தினங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்த அவர், 10 பேரும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவித்தார். மேலும் நடந்த சம்பவம் குறித்து 10 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையும், காவலர்களிடம் நடத்திய விசாரணையும் ஒத்துப்போனதாகவும் தெரிவித்தார்.