Skip to main content

தினகரனின் சூழ்ச்சி வலையில் சசிகலா சிக்கி தவிக்கிறார்! - திவாகரன்

Published on 25/04/2018 | Edited on 26/04/2018

தினகரனின் சூழ்ச்சி வலையில் சசிகலா சிக்கி தவிக்கிறார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுந்தரக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன்,

சசிகலா சிறைக்கு சென்ற சமயத்தில் நான் எடப்பாடி பழனிச்சாமியை தான் ஆதரித்தேன். எனது உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளால் தான் தினகரனை ஆதரித்தேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நான் உறுப்பினர் கூட இல்லை. நான் அந்த கட்சியில் இருந்ததாக சொல்லும் தினகரன் மீது வழக்கு தான் போட வேண்டும்.

அதிமுக உடைந்ததற்கு தினகரனே காரணம். தினகரன் இல்லை என்றால் அதிமுக பிளவு பட்டிருக்காது. சிறையில் இருந்தாலும் அதிமுகவிற்கு சசிகலாவே பொதுச் செயலாளராக இருந்திருப்பார். அதனை கெடுத்தவர் தினகரன்.

தினகரனால் திட்டமிட்டு சாகடிக்கப்பட்ட அதிமுக அம்மா அணிக்கு நான் இனி உயிர் கொடுப்பேன். மிக விரைவில் தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளேன். இன்னும் 6 மாதங்களில் தினகரன் தனிமரமாக இருப்பார். என்னை கண்டு தினகரன் பயன்படுகிறார்.

தினகரனால் இரட்டை இலை சின்னத்தையோ அதிமுகவையோ இனி மீட்க முடியாது. தொண்டர்களை தக்க வைக்க வார்த்தை ஜாலம் காட்டுகிறார். தினகரனின் சூழ்ச்சி வலையில் சசிகலா சிக்கி தவிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியிடமும், ஓபிஎஸ்சிடமும் தினகரன் பாட்சா பலிக்கவில்லை. இப்போது என்னிடம் வாலாட்டி பார்க்கிறார். நெருக்கடியான காலக் கட்டத்தில் கட்சியை காப்பாற்றியது திவாகரனே தவிர தினகரன் அல்ல.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் தினகரன் வெற்றி வேலை விட்டு என்னை ஆழம் பார்க்கிறார். என் அக்கா சசிகலா வேண்டுமானால் தினகரனிடம் ஏமாந்து இருக்கலாம். நான் ஒரு போதும் ஏமாற மாட்டேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்