காஞ்சிபுரம் பெருநகர போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் சரவணன் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் (டிஎஸ்பி பட்டாலியன்) பிரவீன், அசேன் ஆகியோர் நேற்று முன்தினம் (15ம் தேதி) இரவு இருசக்கரவாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மானாம்பதி கூட் ரோட்டுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நோக்கில் படுத்து தூங்கியுள்ளனர். கையில் இருந்த வாக்கிடாக்கியை எஸ்ஐ சரவணன் தனது தலைக்கு கீழ் வைத்துப்படுத்துள்ளார். இரவு 10 மணிக்கு தூங்கிய அவர்கள் நேற்று (16.10.2018) அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்துள்ளனர். அப்போது தலைக்கு அடியில் இருந்த வாக்கி டாக்கியை காணவில்லை.

யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு காஞ்சிபுரம் பெருநகர காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அவர்கள் தூங்கியது இருட்டான பகுதி. அங்கு சிசிடிவி கேமராவும் இல்லை. இதனால் வாக்கிடாக்கியை தூக்கிச் சென்ற நபர் யார் என்பது குறித்து காஞ்சிபுரம் பெருநகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிய போலீசாருக்கு எஸ்பி சந்தோஷ் ஹாதிமானி செம டோஸ் விட்டுள்ளார். பணியின் போது தூங்கிய 3 போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் எஸ்பி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.