சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த ஜூன் மாதம் ஆனித் திருமஞ்சனத் தேர் மற்றும் தரிசன விழாவின் போது கோவில் தீட்சிதர்கள் கோவிலில் நடைமுறையை மாற்றிக் கனகசபையில் பக்தர்கள் 4 நாட்களுக்கு வழிபட அனுமதி இல்லை எனப் பதாகை வைத்தனர். இதற்குப் பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறையினர் அந்தப் பதாகையை அகற்றச் சென்றபோது தீட்சிதர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவிழா முடிந்த பிறகு அந்தப் பதாகை காவல்துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பதாகை அகற்றப்பட்டாலும் கனகசபையில் பக்தர்களை வழிபட அனுமதிக்க முடியாது எனத் தீட்சிதர்கள் அடாவடியாகச் செயல்பட்டனர். இதனை முறியடிக்கும் விதமாகக் காவல்துறையினர் பாதுகாப்பில் இந்து சமய அறநிலையத்துறையினர் கனகசபையின் கிழக்குப் பகுதி வழியில் ஏறி வழிபட்டனர். அப்போது தீட்சிதர்களின் பூணூலை அறுத்துக் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் தாக்கியதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கௌசிக் சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியுள்ளார்கள்.
இது வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது எனச் சிதம்பரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதனையறிந்த சூர்யா உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர். கடந்த 10 தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா மற்றும் கௌசிக் சுப்ரமணியன் சரணடைந்து சென்னையில் வழக்கு ஒன்றில் கையெழுத்திடுவதாகவும் அது முடிந்தவுடன் சிதம்பரத்தில் தங்கி கையெழுத்து இடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.